தேன்கனிக்கோட்டையில் குடும்ப நிலம் போலி பத்திரப்பதிவு என புகார்: 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில், 2 ஏக்கர் 36 சென்ட் குடும்ப நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலசெட்டி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மற்றும் அவரது மனைவி ஷில்பாஶ்ரீ ஆகியோரது குடும்பத்திற்கு 2 ஏக்கர் 36 சென்ட் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலம் அவர்களது முப்பாட்டன் காலத்திலிருந்து குடும்ப சொத்தாக இருந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுப்பிரமணி மற்றும் பத்திர ஆவண எழுத்தர்களான சந்தோஷ், சந்திரசேகர், வெங்கடராஜ் ஆகியோர் ஆதார் ஆவணங்களில் மாற்றம் செய்து, போலி ஆவணங்களைத் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் தங்களது குடும்ப நிலத்தை தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பத்திரப்பதிவு செய்ததாக நரசிம்மன் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நரசிம்மன், ஷில்பாஶ்ரீ மற்றும் அவர்களது குடும்பத்தினர், தங்களது குடும்ப சொத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
திடீர் சாலை மறியல்
இந்நிலையில், இன்று ஷில்பாஶ்ரீ, நரசிம்மன் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, போலி ஆவணங்கள் தயாரித்து தங்களது குடும்ப நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் பத்திர ஆவண எழுத்தர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் வாக்குவாதம்
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பத்திரப்பதிவு தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நிலம் தொடர்பான பத்திரப்பதிவை கேள்வி கேட்ட தங்களது குடும்பப் பெண்களை பத்திர ஆவண எழுத்தர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்க முயன்றதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் மீது தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமை மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
தமிழக வெற்றிக்குரல்