அனாதை உடல்களின் காவலர் சந்தோஷ் காலமானார்: 39 ஆண்டுகள் மருத்துவமனையையே வாழ்க்கையாக்கிய மனிதர்.
கேரள மாநிலம் கொல்லம் நகரில், அனாதையாகவும் அடையாளம் தெரியாமலும் இறந்து போனவர்களின் உடல்களைப் பெற்று, அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வந்த சந்தோஷ் தனது 54-வது வயதில் காலமானார். பல ஆண்டுகளாக கொல்லம் மாவட்ட மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புறத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருந்த சந்தோஷின் மறைவு, அவரை அறிந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 வயதில் தொடங்கிய மருத்துவமனை வாழ்க்கை
ஒழுகுப்பாறை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், தனது 5-வது வயதிலேயே கொல்லம் மாவட்ட மருத்துவமனைக்கு வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தையைப் பராமரிப்பதற்காக மருத்துவமனையில் தங்கிய அவர், சுமார் 15 ஆண்டுகள் தந்தையை கவனித்தார்.
இதன் காரணமாக அவரது கல்வி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் மருத்துவமனை வளாகமே அவருக்கு வீடாகவும், வாழ்க்கையாகவும் மாறியது.
அனாதை உடல்களுக்கு இறுதிச்சடங்கு
மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்களின் உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் பணியிலும் சந்தோஷ் ஈடுபடத் தொடங்கினார்.
சுடுகாட்டிற்குள் தள்ளுவண்டி செல்ல முடியாத சூழ்நிலையில், வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உடல்களை தனது தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார். இந்தப் பணிக்காக அப்போது அவருக்கு கிடைத்த கூலி வெறும் 75 ரூபாய்.
உடல்களின் நிலை எவ்வாறு இருந்தாலும், அவற்றைத் தொடுவதற்கோ, இறுதிச்சடங்கு செய்வதற்கோ சந்தோஷ் தயங்கியதில்லை என அவரை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களையும் கூட அச்சமின்றி கையாண்டதாக கூறப்படுகிறது.
இதனால் கொல்லம் நகரில் அவர் “அனாதை உடல்களின் காவலர்” என்ற அடையாளத்துடன் அறியப்பட்டார்.
செய்தியாக வெளியான வாழ்க்கை; கிடைத்த வேலை
சந்தோஷின் வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியான பிறகு, அவருக்கு கொல்லம் மாவட்ட மருத்துவமனையின் பிணவறை காப்பாளர் பணியும் கிடைத்தது.
எந்த நேரத்திலும் உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்வந்து உதவி செய்த அவர், மருத்துவமனைக்கு வரும் பலருக்கும் பரிச்சயமானவராக இருந்தார்.
54 வயதில் அதே சுடுகாட்டில் இறுதி பயணம்
சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சந்தோஷ், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
பல ஆண்டுகளாக எண்ணற்ற ஆதரவற்ற உடல்களை தனது தோளில் சுமந்து இறுதிப்பயணத்திற்கு அனுப்பிய சந்தோஷ், தனது 54-வது வயதில் அதே சுடுகாட்டிற்கு உயிரற்ற உடலாகச் சென்றார்.
வாழ்நாளில் ஆதரவற்றவர்களுக்கு இறுதி மரியாதை செய்த அவர், இறுதியில் அவர்களுடன் நினைவுகளில் இணைந்துவிட்டார். சந்தோஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் திரண்டனர்.
39 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை வளாகத்தையும், அங்கு ஆதரவின்றி உயிரிழந்தவர்களையும் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்த சந்தோஷின் கதை, மனிதநேயத்தின் மறக்க முடியாத பதிவாகவே இருக்கும்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்