தந்தை மீது சேற்றுநீர் தெறித்ததை கேட்ட மகன் மீது கொடூர தாக்குதல் – வாலிபர்கள் மீது போலீசில் புகார்!
கேரள மாநிலம், வர்க்கலாவில் தந்தையின் உடலில் சேற்றுநீர் தெறித்ததை தட்டிக்கேட்ட மகனை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கொடூரமாக தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி தொடுவே பகுதியில் 25 வயதான ராகுல் என்பவரே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. தந்தையுடன் மீன்பிடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரது தந்தையின் உடலில் சேற்றுநீரை தெறிக்கவிட்டதாக தெரிகிறது.
இதனை ராகுலும் அவரது தந்தையும் தட்டிக்கேட்டதை தொடர்ந்து, அவர்களுக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவர் சேர்ந்து ராகுலை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அழைத்ததாக கூறப்படும் மற்றொரு இளைஞர், ராகுலின் காலில் இருசக்கர வாகனத்தை மோதச் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி, குழுவில் இருந்த ஒருவர் ராகுலின் கைத்தடியை பயன்படுத்தி அவரது தலையில் தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ராகுல், வர்க்கலா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வர்க்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்