‘கழுதை’ பெயரில் நர்சிங் சான்றிதழா? மத்தியப் பிரதேச நர்சிங் கவுன்சில் மீது விசாரணை.
மத்தியப் பிரதேசத்தில் கழுதையின் பெயரில் நர்சிங் சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, அங்குள்ள நர்சஸ் பதிவு கவுன்சிலின் சான்றிதழ் வழங்கும் நடைமுறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேச நர்சஸ் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்சில் (MPNRC) மேற்கொள்ளும் ஆன்லைன் பதிவு நடைமுறையில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Donkey’ என பெயர் குறிப்பிட்டு விண்ணப்பம்
NSUI மாநில துணைத் தலைவர் ரவி பர்மார், ஆன்லைன் பதிவு நடைமுறையை சோதிக்கும் நோக்கில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தில், பெயர் குறிப்பிட வேண்டிய இடத்தில் “Donkey” (கழுதை) எனவும், புகைப்படம் பதிவேற்ற வேண்டிய பகுதியில் கழுதையின் புகைப்படத்தையும் பதிவேற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், தந்தை மற்றும் தாய் பெயர்களாக முறையே “Donkey Father”, “Donkey Mother” எனவும், சாதி குறிப்பிட வேண்டிய பகுதியில் “Animal” (மிருகம்) எனவும் பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முகவரி உள்ளிட்ட பிற விவரங்களையும் உண்மையான தகவல்களுக்கு பதிலாக சோதனைக்காகத் தோன்றியபடி நிரப்பியதாக ரவி பர்மார் கூறியுள்ளார்.
சான்றிதழ் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு
இவ்வாறு அடிப்படை தகவல்களே சரியாக இல்லாத வகையில் விண்ணப்பிக்கப்பட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை ஏற்று சான்றிதழ் வழங்கியதாக ரவி பர்மார் குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களது ஆன்லைன் பதிவு நடைமுறையில் உள்ள குறைபாடுகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இந்த விண்ணப்பத்தை சோதனை முயற்சியாக சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், விண்ணப்பதாரர்களின் அடையாளம் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து சான்றிதழ் வழங்கும் நடைமுறை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் சான்றிதழ் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்