வாணியம்பாடியில் ஏரியில் மண் அள்ளும் பணி: 10 ஜேசிபி, 50 டிராக்டர்களால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து மண் மற்றும் மணல் எடுப்பது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், விவசாயிகள் பெயரில் பெறப்படும் அனுமதியை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரியில் இருந்து தொடர்ந்து மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று காலை முதல் அந்தப் பகுதியில் சுமார் 10 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 50 டிராக்டர்கள் மூலம் மண் அள்ளப்பட்டதாகவும், அந்த மண் செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதிகாரிகள் நேரில் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற நாளில் மட்டும் 6 விவசாயிகளுக்கு மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏரியில் இருந்து மண் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் மற்ற வாகனங்களின் விவரங்களையும் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் மேல்நடவடிக்கைக்காக மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுமதியை மீறி மண் எடுக்கப்பட்டதா?

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து தினசரி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, விவசாயிகளின் நிலங்களுக்கு மண் எடுத்துச் செல்லப்படுகிறது என்ற பெயரில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மண் எடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிகளில் இருந்து மண் எடுப்பதற்கான அனுமதி, எடுக்கப்பட்ட மண்ணின் அளவு, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவை கொண்டு செல்லப்பட்ட இடங்கள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply