அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய 17 ஐடிஐ மாணவர்கள் கைது.
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் 17 ஐடிஐ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 14 பேர் சிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஐடிஐ மாணவர்கள் சிலர் கத்தியுடன் இருப்பதாக அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், மொத்தம் 19 மாணவர்களில் 17 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய இரண்டு மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் குழுவில் திட்டமிட்டதாக விசாரணையில் தகவல்
பிடிபட்ட மாணவர்களை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, அவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஐடிஐயில் படித்து வருபவர்கள் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வள்ளலார் நகர் அரசு ஐடிஐயைச் சேர்ந்த மூன்று மாணவர்களை தாக்கும் அல்லது கொலை செய்யும் நோக்கத்துடன் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக வள்ளலார் நகர் ஐடிஐ மாணவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு, இன்ஸ்டாகிராமில் குழு ஒன்றை உருவாக்கி அதில் இது தொடர்பாக விவாதித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு பட்டாக்கத்திகள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 17 பேரில் 14 பேர் சிறார்கள் என்பதால், அவர்கள் புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டதாகவும், மற்ற மூன்று மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பட்டப்பகலில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் மாணவர்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடையே ஆயுதங்களுடன் மோதல் ஏற்படும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், ரயில் நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்