‘மருத்துவமனையில் இருக்கிறேன்… பணம் அனுப்புங்கள்’ – போலி வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் சைபர் மோசடி: எச்சரிக்கை.

பழக்கமானவர்களின் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, அவசரமாக பணம் கேட்டு மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள், தங்களுக்கு தெரிந்த நபரின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்குகின்றனர். பின்னர், “நான் மருத்துவமனையில் இருக்கிறேன்”, “அவசரமாக பணம் தேவைப்படுகிறது” போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி பணத்தைப் பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் தெரிந்த பெயர் மற்றும் புகைப்படம் இருப்பதை மட்டும் வைத்து, அந்தச் செய்தியை அனுப்பியிருப்பது உண்மையான நபர்தான் என்று நம்பக்கூடாது.

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை

1. பெயர், புகைப்படத்தை மட்டும் நம்ப வேண்டாம்
அறிமுகமான நபரின் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படம் இருப்பதால், அவர்தான் பணம் கேட்கிறார் என்று உறுதி செய்யக்கூடாது.

2. நேரடியாக தொடர்பு கொண்டு உறுதி செய்யுங்கள்
பணம் அனுப்புவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரை நேரடியாக தொலைபேசியில் அழைத்தோ அல்லது வீடியோ கால் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்ய வேண்டும்.

3. அவசரச் செய்திகளை சந்தேகத்துடன் அணுகுங்கள்
மருத்துவமனை, அவசர சிகிச்சை அல்லது உடனடியாக பணம் தேவைப்படுகிறது போன்ற அவசரத்தை ஏற்படுத்தும் செய்திகளை எப்போதும் சந்தேகத்துடன் அணுக வேண்டும்.

4. தொலைபேசி எண்ணை சரிபார்க்கவும்
பெயரும் புகைப்படமும் சரியாக இருந்தாலும், செய்தி வந்துள்ள தொலைபேசி எண் உண்மையில் அந்த நபருடையதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

5. குடும்பத்தினரிடம் விசாரிக்கலாம்
தேவைப்பட்டால், பணம் கேட்டதாகக் கூறப்படும் நபரின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தகவலை உறுதி செய்த பின்னரே பணம் அனுப்ப வேண்டும்.

மோசடியில் சிக்கினால் உடனடியாக புகார்

இதுபோன்ற சைபர் பண மோசடியில் பாதிக்கப்பட்டால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்.

மேலும், தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம்: National Cyber Crime Reporting Portal

சைபர் மோசடியில் பணம் இழந்திருந்தால், புகார் அளிப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply