இனி 2 மணி நேரம் மட்டுமே! குழந்தைகளின் Instagram, Facebook பயன்பாட்டுக்கு Meta புதிய கட்டுப்பாடு
அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் Instagram மற்றும் Facebook பயன்படுத்துவதற்கு Meta நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இரு செயலிகளையும் சேர்த்து ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த புதிய விதிமுறைகள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளன. பெற்றோரின் அனுமதி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை மாற்ற முடியும்.
Instagram, Facebook-க்கு சேர்த்து 2 மணி நேரம்
புதிய விதிமுறைகளின்படி, Instagram மற்றும் Facebook ஆகிய இரு செயலிகளுக்கும் தனித்தனியாக 2 மணி நேரம் வழங்கப்படாது.
இரண்டு செயலிகளிலும் செலவிடும் நேரமும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு, தினசரி 2 மணி நேர வரம்பு நிர்ணயிக்கப்படும். இந்த வரம்பை பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே மாற்ற முடியும்.
நள்ளிரவு முதல் காலை வரை பயன்படுத்த தடை
சிறார்களின் இரவு நேர சமூக வலைதளப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை Instagram மற்றும் Facebook பயன்பாடு இயல்பாகவே முடக்கப்படும்.
இந்த நேரத்தில் Feed, Stories, Reels உள்ளிட்ட உள்ளடக்கங்களைப் பார்ப்பது மட்டுமின்றி, பதிவிடுவதற்கும் தடை இருக்கும்.
பள்ளி நேரத்தில் Notifications முடக்கம்
பள்ளி நேரத்தில் குழந்தைகளின் கவனச்சிதறலை குறைக்கும் வகையில், காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை Push Notifications இயல்பாக முடக்கப்படும்.
எனினும், Direct Messages மற்றும் கணக்கு பாதுகாப்பு அல்லது அவசர பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
15 நிமிடங்களுக்கு ஒருமுறை நினைவூட்டல்
தொடர்ச்சியாக நீண்ட நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு 15 நிமிட தொடர்ச்சியான பயன்பாட்டிற்குப் பிறகும் இடைவேளை எடுத்துக்கொள்ளும் வகையில் நினைவூட்டல்கள் வழங்கப்படும்.
மேலும், ஒரு நாளில் 60 நிமிடங்கள் மற்றும் 90 நிமிடங்கள் பயன்படுத்தியபோதும் கூடுதல் நினைவூட்டல்கள் வழங்கப்படும்.
AI மூலம் வயது சரிபார்ப்பு
13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் தவறான பிறந்த தேதியை பதிவு செய்து வயதை மறைத்து கணக்கு பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், வயதை கண்டறியும் தொழில்நுட்பத்தை Meta மேலும் வலுப்படுத்த உள்ளது.
இதன் மூலம் சிறார்களுக்கு பொருந்தக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய Meta நடவடிக்கை மேற்கொள்கிறது.
Likes மற்றும் Reactions மறைக்கப்படும்
18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு பதிவுகளில் கிடைக்கும் Likes மற்றும் Reactions எண்ணிக்கை இயல்பாக மறைக்கப்படும்.
மேலும், சிறார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில Cosmetic Surgery மற்றும் Extreme Makeup Filters பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
Algorithm இல்லாத Feed-க்கும் வாய்ப்பு
Instagram மற்றும் Facebook-ல் Meta-வின் Recommendation Algorithm மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளடக்கங்களுக்குப் பதிலாக, பயனர் Follow செய்யும் கணக்குகளின் பதிவுகளை மட்டும் கொண்ட Non-Algorithmic Feed-ஐ தேர்வு செய்யும் வசதியும் சிறார்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Autoplay அம்சத்தையும் பெற்றோர் அல்லது சிறார்கள் கட்டுப்படுத்த முடியும்.
TikTok, YouTube-க்கும் Meta அழைப்பு
சிறார்களின் சமூக வலைதளப் பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் TikTok மற்றும் YouTube நிறுவனங்களும் இதேபோன்ற நேரக் கட்டுப்பாடுகள், இரவு நேர தடை மற்றும் பள்ளி நேர Notification கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என Meta வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சிறார்களின் சமூக வலைதளப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. Meta மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், நிறுவனம் எந்த தவறும் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை.
தமிழக வெற்றிக்குரல்