பாலக்கோடு அருகே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சொகுசு கார் – முதியவர் பலி; மகன் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சொகுசு கார் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் பெங்களூருவுக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, தனது மகன் சக்திவேல் (35) ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பாலக்கோடு அடுத்த பொடுத்தம்பட்டி மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பாஸ்கரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் சக்திவேல் பலத்த காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த புலிகரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், காயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக புலிகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி டயர் வெடித்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்