பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் – பொதுமக்கள், மாணவர்கள் அவதி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பேருந்து பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பேருந்துகள் வந்து செல்லும் பகுதிகளிலும், பேருந்துகளுக்கு இடையிலும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் காலை நேரத்தில் தங்களது வாகனங்களை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு வெளியூர்களுக்குச் சென்று, இரவு நேரத்தில் மீண்டும் வந்து வாகனங்களை எடுத்துச் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பேருந்துகள் சீராக வந்து செல்வதிலும், பயணிகள் பேருந்துகளில் ஏறி இறங்குவதிலும் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் நிலையில், வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதால் கூடுதல் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையம் படிப்படியாக இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில், பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாக வரும் வாகனங்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் வாகனங்களை முறைப்படுத்துவதற்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply