வழக்குகளை விரைந்து முடிக்க உதவும் சமரச மையங்கள் – ஓசூரில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி.
ஓசூர்: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான உடன்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் முடித்து வைக்க உதவும் சமரச மையங்கள் (Mediation Centres) குறித்த மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழ்நாடு சமரச மையத்தின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை சமரச மையம் சார்பில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
நீதிபதி தலைமையில் பேரணி
ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற பேரணி, ஓசூர் நீதிமன்ற வளாகம் மற்றும் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் இருந்து தொடங்கியது.
“சமரசத்தின் மூலம் நல்லிணக்கத்தை வளர்ப்போம்”, “வலிமையான தேசத்திற்காக சமரசம் புரிதலை உருவாக்குகிறது” உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஓசூர் தாலுகாவைச் சேர்ந்த நீதித்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள், சமரசர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.
பேரணியின்போது சமரச மையங்களின் செயல்பாடுகள், அதன் மூலம் வழக்குகளைத் தீர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைமுறைகள் குறித்து விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
2024-25ல் 43 வழக்குகள் தீர்வு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சந்தோஷ், ஓசூர் சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
அவர் கூறியதாவது:
“2023ஆம் ஆண்டு ஓசூர் சமரச மையம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் செயல்பாடுகளில் சுணக்கம் இருந்தாலும், 2024-25 காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 43 வழக்குகள் சமரச முறையில் தீர்த்து வைக்கப்பட்டன. நடப்பு ஆண்டில் இதுவரை 35 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 50 வழக்குகளை சுமுகமாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
பணம், நேரம் மற்றும் அலைச்சல் மிச்சம்
சமரச மையம் மூலம் வழக்குகளைத் தீர்ப்பதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் செலவு மற்றும் அலைச்சல் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறுவதால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் விரிசல்களைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும், இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே உறவும் நட்பும் தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
சமரச முறையில் இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தீர்வு காணப்படுவதால், “வின்-வின்” சூழல் உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓசூர் தாலுகா ‘பைலட் ப்ராஜெக்ட்’
சமரச மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த நீதிபதி சந்தோஷ், அதன் அடிப்படையில் ஓசூர் தாலுகா கடந்த ஆண்டு சிறப்பு ‘பைலட் ப்ராஜெக்ட்’ திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
முதன்மை மாவட்ட நீதிபதியின் அறிவுறுத்தலின்படி இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த விழிப்புணர்வு கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பாகவே சமரச மையத்தின் மூலம் சுமுகமான தீர்வை நாட முன்வர வேண்டும் என்றும், இதற்காக ஊடகங்களின் ஆதரவு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உறவுகளைப் பாதுகாக்கும் சமரசம்
வழக்கு தொடர்வதன் மூலம் நீண்ட காலம் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கிக் கொள்வதற்கு சமரச மையங்கள் வாய்ப்பளிக்கின்றன.
இதன் மூலம் நேரம், பணம் மற்றும் அலைச்சலைக் குறைப்பதுடன், குடும்பம் மற்றும் சமூக உறவுகளில் ஏற்படக்கூடிய விரிசல்களையும் தவிர்க்க முடியும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
ஓசூரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி மூலம், “நீதிமன்றப் படிகளை ஏறுவதற்கு முன்பே சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” என்ற கருத்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்