டெல்லி ரயிலில் சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள்! முக்கிய குற்றவாளி மணிப்பூரில் கைது

சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை மணிப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லி புறப்பட்ட ரயிலில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரயில் நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆண், பெண்

சூட்கேஸை ரயிலில் கொண்டு வந்து வைத்துச் சென்றது ஒரு ஆண் மற்றும் பெண் என சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டறிந்தனர்.

அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை மேற்கொண்டபோது, இருவரும் ஒடிசா வழியாக தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற நிலையில், அவர்கள் அங்கிருந்து மணிப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் முக்கிய குற்றவாளி கைது

இதையடுத்து மணிப்பூரில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மாணிக் உத்தின் லஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவருடன் அவரது மனைவி பகமதி மாஜிக் என்பவரும் சம்பவத்தில் தொடர்புடையதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில் நடந்த கொலை?

போலீஸ் விசாரணையின்படி, மாணிக் உத்தின் லஸ்கர், பகமதி மாஜிக் மற்றும் ஹைதுல் நிஷா ஆகியோர் தாம்பரம் பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஹைதுல் நிஷா கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல் பாகங்களை துண்டித்து ஒரு பகுதியை சூட்கேஸில் வைத்து டெல்லி செல்லும் ரயிலில் விட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உடலின் மற்றொரு பகுதி பிரியாணி டபராவில் வைத்து வேகவைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் தலை எங்கே?

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஹைதுல் நிஷாவின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது எங்கு வீசப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணின் மகனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மாணிக் உத்தின் லஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடைபெறும் விசாரணையின் மூலம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply