ஆறளம் பண்ணையை அச்சுறுத்திய ‘மொழயானை’ பிடிபட்டது: மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்த வனத்துறை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறளம் பண்ணை மற்றும் மறுவாழ்வு பகுதிகளில் பல ஆண்டுகளாக அச்சத்தை ஏற்படுத்தி வந்த ‘மொழயானை’ என அழைக்கப்படும் கண்ணூர் மக்னா-1 யானை, வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.

வியாழக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் நடவடிக்கை தொடங்கியது.

அடுத்தடுத்து மயக்க ஊசி செலுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்

முதல் முயற்சியில் யானையை முழுமையாக மயக்க முடியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் மேலும் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தினர்.

இருப்பினும், யானை முழுமையாக மயங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் மருந்து செலுத்தப்பட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகே யானை முழுமையாக மயக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

10 கி.மீ தொலைவில் தயார் நிலையில் இருந்த கும்கிகள்

யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வளையஞ்சாலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த கும்கி யானைகள் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டன.

யானை பல மணி நேரமாக முழுமையாக மயங்காத நிலையில் இருந்ததால், ஆரம்பத்தில் கும்கி யானைகள் அதன் அருகில் கொண்டு செல்லப்படவில்லை.

பின்னர் கும்கி யானைகளான விக்ரம், உன்னிகிருஷ்ணன் மற்றும் பரதன் ஆகியவை சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டன.

பல ஆண்டுகளாக ஆறளம் பண்ணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மறுவாழ்வு பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தி வந்த இந்த யானையை பிடிக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply