பாலக்கோட்டில் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு – டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக்கு தீர்மானம்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாளப்பட்டி, ஜக்கசமுத்திரம், தும்பலஅள்ளி, ஜெர்தலாவ், பேளாரஅள்ளி, பி.செட்டிஅள்ளி, எர்ரனஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, கொலசனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கிராம சபைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஞானவேல், சரவணன், சஞ்சீவன், முருகேசன், கோவிந்தன், சண்முகம், பவுன்ராஜ், நாகராஜ், தாமோதரன் ஆகியோர் ஊராட்சிகளின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகள் குறித்த அறிக்கைகளை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்தனர்.
கூட்டங்களுக்கு தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதிசெல்வம், வீரபத்திரன், விஜிபாலன், உமா மற்றும் சாலை ஆய்வாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
கம்மாளப்பட்டியில் கலெக்டர் பங்கேற்பு
கம்மாளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன் பங்கேற்றார். அப்போது, ‘வளர்ச்சியடைந்த பாரதம்’, கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், கிராமங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் நலன் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
டெங்கு, மலேரியா தடுப்புக்கு முக்கியத்துவம்
கிராம சபைக் கூட்டங்களில் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நோய் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, மழைநீரை சேமித்தல், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும், ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாகச் சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டங்களில் துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்