மின் விளக்கு மாற்றும் பணிக்கு சென்ற முதியவர் மாடியில் சடலமாக மீட்பு: மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மின் விளக்குகளை மாற்றும் பணிக்கு சென்ற முதியவர், வீட்டின் மாடியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரண்டஅள்ளி அடுத்த ஆமேதனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கொரவாண்டஅள்ளி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதுடன், ஊராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
இவரது தந்தை நாராயணசாமி (61). இவர் பெலமரனஅள்ளி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மின் விளக்குகளை மாற்றும் பணியில் ஈடுபட்ட தந்தை, மகன்
இந்நிலையில், நேற்று சக்திவேலும் அவரது தந்தை நாராயணசாமியும் ஆல்மாரப்பட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்களில் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சக்திவேல் அவசர வேலை காரணமாக ஓசூருக்கு சென்றுள்ளார். இதனால் நாராயணசாமி மட்டும் அப்பகுதியில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இரவு நேரமாகியும் நாராயணசாமி வீட்டிற்கு திரும்பாததால், அவரைத் தொடர்புகொள்ள சக்திவேல் அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார். ஆனால், நாராயணசாமி அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
வீட்டின் மாடியில் சடலமாக மீட்பு
இதையடுத்து நாராயணசாமியை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில், ஆல்மாரப்பட்டியில் அருணாச்சலம் என்பவரது வீட்டின் மாடியில் நாராயணசாமி உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நாராயணசாமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கியதா? போலீசார் விசாரணை
சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் விளக்குகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நாராயணசாமியை மின்சாரம் தாக்கியதன் காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணையின் முடிவிலேயே முதியவரின் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்