சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார்: தொழிலதிபர் வீரமணி உள்ளிட்ட 3 பேர் கைது!

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பிரபல கிரானைட் தொழிலதிபரும் ஜெம் குழுமத் தலைவருமான வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீரமணி (84), அவருடன் தொடர்புடைய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிக்மன் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பென்டிரைவில் கிடைத்த அதிர்ச்சி வீடியோ

கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தன்னார்வலர் ஒருவர் ரகசிய புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

தனது அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பென்டிரைவ் வழங்கியதாகவும், அதில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் பென்டிரைவில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததாகவும், அதில் 13 வயது சிறுமிக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அக்டோபர் 7ஆம் தேதி போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

தொழிலதிபர் வீரமணி என அடையாளம்

போலீசாரின் விசாரணையில், வீடியோவில் இடம்பெற்ற முதியவர் தொழிலதிபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டதாக மின்னம்பலம் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிக்மனிடம் ஒப்படைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

அந்த வீட்டிற்கு பல சிறுமிகள் அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும் போலீசார் விசாரணையில் தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டதாகவும், வழக்குக்குத் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சில சிறுமிகள், பெண்களின் உடைமைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் சிறையில் அடைப்பு

விசாரணையைத் தொடர்ந்து வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிக்மன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் தொடர்புடைய வழக்கு என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் உள்ளிட்ட எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.

இந்த வழக்கில் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான உண்மைகள் நீதிமன்ற விசாரணை மற்றும் அடுத்தகட்ட போலீஸ் விசாரணையில் தெரியவரும்.

Leave a Reply