பெரியமலை கோயிலுக்காக மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து: 2 மணி நேரம் தவித்த பயணிகள்.
கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புங்கம்பட்டி – கருத்தம்பாரம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து, போக்குவரத்துக் கழக மேலாளரின் அனுமதியின்றி மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சனிக்கிழமை புரட்டாசி மாதத்தை முன்னிட்டு காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பெரியமலை கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து வேறு ஊர்கள் வழியாக மாற்றி இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாற்று வழித்தடத்தால் பயணிகள் அவதி
நிர்வாக அலட்சியம் காரணமாக அரசு பேருந்து வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் தங்களது இலக்கை சென்றடைய கூடுதலாக சுமார் இரண்டு மணி நேரம் வரை சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டிய அரசு பேருந்து, யாருடைய அனுமதியின் பேரில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது என்பது குறித்து பயணிகள் கேள்வி எழுப்பினர்.
நடத்துனர், மேலாளர் பதில் குறித்து கேள்வி
பேருந்து ஏன் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது, இதற்கான அனுமதி யாரிடம் பெறப்பட்டது என நடத்துனரிடம் பயணிகள் கேட்டபோது, அவர் தெளிவான பதில் அளிக்காமல் மழுப்பலாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக மேலாளரிடம் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக தனக்கு எந்த தகவலும் தெரியாது என பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் வழித்தட மாற்றத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதுடன், பயணிகளுக்கு ஏற்படும் கூடுதல் சிரமத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்