பின்புறமாக 5 கி.மீ. மாரத்தான் ஓடிய நீலகிரி மாணவர்கள்: தூய்மை பணியாளர்கள் கையால் பரிசு பெற்று நெகிழ்ச்சி.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே நடைபெற்ற ‘நம்ம ஆவடி – போதை இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பின்புறமாக ஓடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆவடி OCF அருகே ‘நம்ம ஆவடி’ என்ற தலைப்பில் 3ஆம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. சேப்பா அகடாமி செயலாளர் சங்கீதா ராஜா கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.
கோவில் பாதை வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான், வெள்ளனூர் அரசு பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
3 வயது முதல் 60 வயது வரையிலான பொதுமக்கள் மட்டுமின்றி, சிலம்பம், கராத்தே மற்றும் யோகா பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பின்புறமாக ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய நீலகிரி மாணவர்கள்
இந்த மாரத்தானின் சிறப்பு அம்சமாக, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து வந்த மூன்று மாணவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பின்புறமாக ஓடி போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வழக்கத்திற்கு மாறான இந்த முயற்சி, மாரத்தானில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் போட்டியில் பங்கேற்றனர்.
தூய்மை பணியாளர்கள் கையால் பரிசு
மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூய்மை பணியாளர்களை வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து சேப்பா அகடாமி செயலாளர் சங்கீதா ராஜா கூறுகையில், நாம் வசிக்கும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் கையால் மாணவர்கள் பரிசுகளைப் பெறுவது அவர்களுக்கும் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்றார்.
மேலும், தூய்மை பணியாளர்கள் அசுத்தத்தை அகற்றி பொதுமக்கள் தூய்மையான சூழலில் வாழ்வதற்கு முக்கிய பங்காற்றி வருவதால், அவர்களுக்கு சமூகமாக நாம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதை இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு
போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த மாரத்தான் நடத்தப்பட்டதாக சங்கீதா ராஜா தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளம் வயதினரும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலை காணப்படுவதாகவும், போதைப்பொருள் பயன்பாடு பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக சிறு வயதிலேயே குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளைத் தடுக்கவும், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
போதை இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இதுபோன்ற விழிப்புணர்வு மாரத்தான்களில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பது முக்கியம். வெற்றி, தோல்வி என்பது அடுத்த கட்டம்; விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்பதே மிகப்பெரிய வெற்றி என்றும் சங்கீதா ராஜா தெரிவித்தார்.
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த மாரத்தான், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்கேற்புடன் நிறைவடைந்தது.
தமிழக வெற்றிக்குரல்