கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு! Cath Lab, Neurosurgery குறித்து முக்கிய அறிவிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள், நோயாளிகள் பயன்பெறும் பகுதிகள் மற்றும் கழிவறை உள்ளிட்ட இடங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூய்மை பராமரிப்பில் கூடுதல் கவனம்
மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மருத்துவமனை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரும் வளாகத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
இருதய சிகிச்சைக்கு Cath Lab வசதி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அவசர சிகிச்சைக்கான Cath Lab வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே மருத்துவத்துறையின் மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இருதய நோயாளிகளுக்கு அவசர காலங்களில் உயர்தர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.
NH-44 விபத்துகளுக்கு Neurosurgery மருத்துவர்கள்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை NH-44 பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, விபத்தில் சிக்குபவர்களுக்கு விரைவான அவசர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை (Neurosurgery) மருத்துவர்களுக்கான பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
விபத்து நேரங்களில் தலை மற்றும் மூளை காயங்களுக்கு உடனடி சிறப்பு சிகிச்சை கிடைப்பதற்கான இந்த நடவடிக்கை, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்