திண்டுக்கல் அருகே கோர விபத்து: சாலையோரம் விளையாடிய 4 குழந்தைகள் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மீது பால் வேன் மோதிய கோர விபத்தில், 3 சிறுமிகள் உட்பட 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் விளையாடிய குழந்தைகள்
வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 30) பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் அஞ்சம்மாள் (60) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், அவருடன் உறவினர்களின் குழந்தைகள் சாலையோரத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த பால் வேன் ஒன்று குழந்தைகள் மீது மோதியுள்ளது.
4 குழந்தைகள் பரிதாப பலி
இந்த விபத்தில் யோகவர்ஷினி (11), அனன்யா (6), தனுஸ்ரீ (5), மோசிகரன் (6) ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் யோகவர்ஷினியும் அனன்யாவும் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை நேரில் பார்த்த அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்து, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பால் வேன் ஓட்டுநர் கைது
விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் இரங்கல் – நிதியுதவி அறிவிப்பு
இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த செய்தி அறிந்து முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சம்மாளுக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அஞ்சம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சம்பவத்தில் 4 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்