பாலக்கோடு அரசு கல்லூரியில் டெங்கு, உண்ணிக்காய்ச்சல் விழிப்புணர்வு: மாணவர்கள் பேரணி.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பாரதரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நுண்ணுயிரியல் துறை மற்றும் உளவியல் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.
பொதுமக்களும் மாணவர்களும் இந்நோய்கள் குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவர்கள் நோய்த் தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம்
நிகழ்ச்சிக்கு நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் நளினி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை வகித்துப் பேசினார். பொதுநிர்வாகத் துறைத் தலைவர் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் கிரேஸ் லிடியா மற்றும் மருத்துவர் ஆயுஷா பர்ஹீன் ஆகியோர், டெங்கு மற்றும் உண்ணிக்காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றன, அவற்றின் அறிகுறிகள் என்ன, நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பேரணி
தொடர்ந்து, டெங்கு மற்றும் உண்ணிக்காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவியர்கள் பேரணியாகச் சென்றனர். இதன் மூலம் நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் காந்திமணியன் நன்றியுரை ஆற்றினார். பேராசிரியர்கள் செல்வன், சிவகாமசுந்தரி, கனிமொழி, ரகுநாத், பத்மப்ரியா, ஷாலினிபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்