7 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தீர்ப்பு!
ராஜலிங்கம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை – குழந்தைகளுக்கு ரூ.70 ஆயிரம் வழங்க உத்தரவு!
கிருஷ்ணகிரி – அக்டோபர் 5:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் உட்கோட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுக்காட்டூர் ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், நான்கு பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 08.12.2018 அன்று ராஜலிங்கம் (33) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ராஜலிங்கத்தின் சகோதரர் சின்னசாமி (45) போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாக ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல் ஆய்வாளராக பணியாற்றிய மெய்யரசன் தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து இன்று (05.10.2026) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் எதிரிகளான கோனியா, சிவக்குமார் என்கிற சிவா, அஜித் மற்றும் காளிமுத்து ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.75,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரூ.70,000-ஐ உயிரிழந்த ராஜலிங்கத்தின் குழந்தைகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்றவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்