ஆதார் கைரேகை வைத்து ரூ.11,200 எடுக்கப்பட்டதாக புகார் – 100 நாள் வேலைத்திட்ட பெண் ஆட்சியரிடம் மனு.
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ஆதார் கைரேகையை பயன்படுத்தி ரூ.11,200 எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணம் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி தாலுகா வள்ளிப்பட்டு கிராமம் குட்டக்கொல்லி பகுதியைச் சேர்ந்த செல்வி பொன்னுரங்கம் என்பவர் அளித்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 100 நாள் வேலை செய்ததற்கான பணத்தை எடுப்பதற்காக வள்ளிப்பட்டு செந்தமிழ் இ-சேவை மையத்திற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
அப்போது, இ-சேவை மையத்தை நடத்தி வரும் தமிழரசனிடம், ஆதார் கைரேகை மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து தருமாறு கேட்டதாகவும், கைரேகை வைத்த பின்னர் தனது கணக்கில் இருந்து பணம் வரவில்லை என அவர் தெரிவித்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.
ஆனால், வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அன்றைய தினம் தனது கணக்கில் இருந்து ரூ.9,100 எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 16-ஆம் தேதி மீண்டும் அதே இ-சேவை மையத்திற்கு சென்று கைரேகை வைத்து பணம் எடுக்க முயன்றதாகவும், அன்றும் பணம் வரவில்லை என கூறி தன்னை அனுப்பிவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்தபோது, ஆதார் கைரேகை அடிப்படையிலான பரிவர்த்தனை மூலம் இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.11,200 எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக செல்வி பொன்னுரங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இ-சேவை மையத்தை நடத்தி வரும் தமிழரசனிடம் கேட்டபோது, தான் பணம் எடுக்கவில்லை என்றும், இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இதேபோன்று இ-சேவை மையத்தில் மேலும் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் செல்வி பொன்னுரங்கம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இ-சேவை மையத்தை நடத்தி வருபவர் மீது உரிய விசாரணை நடத்தி, தனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.11,200-ஐ மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆதார் கைரேகையை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின்னரே, பணம் எடுக்கப்பட்ட விதம் மற்றும் சம்பவத்தின் உண்மை நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்