பஞ்சப்பள்ளியில் மழையால் கொடி அவரை பூக்கள் உதிர்வு – விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை!

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொடி அவரை பயிர்கள், கடந்த சில நாட்களாக பெய்து வரும் திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. செடிகளில் பூக்கள் அழுகி உதிர்ந்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கொடி அவரையை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து, காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளன.

இந்த நிலையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் செடிகளில் உள்ள பூக்களில் ஈரப்பதம் அதிகரித்து, அவை அழுகி உதிர்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் காய்ப்புத் திறன் குறைந்து, எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், தற்போது ஒரு கிலோ அவரை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டாலும், ஆள்கூலி, விதைகள், உரம், மருந்துகள் மற்றும் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட சாகுபடி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மழையால் பூக்கள் உதிர்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அதிகரித்துள்ள சாகுபடி செலவுகளுடன் கூடுதல் இழப்பையும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள் பஞ்சப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட கொடி அவரை வயல்களை நேரில் ஆய்வு செய்து, பயிர் பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply