பாலக்கோட்டில் ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் மாயம் – பெற்றோர்கள் வேதனை; போலீசார் தீவிர தேடுதல்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவர்கள் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் கோகுல்வர்ஷன் (15), தளவாய்அள்ளிபுதூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் கவிசாஸ் (15) மற்றும் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் சுதாகர் (15) ஆகிய மூவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு ‘ஏ’ பிரிவில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 5-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், சுமார் 5.30 மணியளவில் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், மூவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் மாணவர்களைத் தேடியுள்ளனர். இருப்பினும், அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன கோகுல்வர்ஷன் சம்பவத்தன்று சிவப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்ததாகவும், கவிசாஸ் மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் பள்ளி சீருடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாணவர்களும் ஒரே நேரத்தில் காணாமல் போனுள்ளதால், அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் எங்கு சென்றனர், அவர்கள் சென்றதாகக் கூறப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காணாமல் போன மாணவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவர்களை எங்காவது பார்த்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பாலக்கோடு காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply