25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு – போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பசுமாடு வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்த பசுமாடு, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள சுமார் 25 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது.
பசுமாடு கிணற்றில் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கயிறு மற்றும் மீன்பிடி வலையை பயன்படுத்தி நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள், பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பசுமாட்டிற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட பசுமாடு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்