கல்லூரி நேர மாற்றத்தால் தவித்த மாணவர்கள் – பேருந்து வசதி கேட்டு சாலையில் அமர்ந்து போராட்டம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 27 துறைகளில் சுமார் 2,005 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதுவரை காலை 10 மணி முதல் மதியம் 2.40 மணி வரை கல்லூரி செயல்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கல்லூரி நேரம் திடீரென மாலை 3.30 மணி வரை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கல்லூரி நேரத்தை மீண்டும் பழையபடி மாற்ற வேண்டும் என மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும், டி.சி. வழங்கப்படும் என மிரட்டப்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், “டி.சி. தயாராக உள்ளது, பெற்றுச் செல்லுங்கள்” என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி நேரத்தை பழையபடி மாற்ற வேண்டும், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, கல்லூரி முதல்வர் வெங்கடேசன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கல்லூரி நேரத்தை பழையபடி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இதையடுத்து, தங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply