பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது!
வேலூர்: பேர்ணாம்பட்டு நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சி பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதாகவும், அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் போராட்டம்
மாடுகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் கூறி, நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, விவசாயிகள் பேரணியாக சென்று பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
50-க்கும் மேற்பட்டோர் கைது
முற்றுகைப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து முற்றுகையிட முயன்றதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தி, விவசாய நிலங்களை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்