ரூ.5 லட்சத்தில் கட்டிய பாதுகாப்புச் சுவர் இடிப்பு: மேகலாம்பட்டியில் மீண்டும் விபத்து அபாயமா?

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மேகலாம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகலாம்பட்டி கிராமத்திற்கு அங்கம்பட்டி வழியாக செல்லும் சாலையில் குறிப்பிட்ட பகுதியில் சாலையோரமாக சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளம் உள்ளது. மேலும், அந்த பகுதி வளைவாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தடுப்புச்சுவர்

கடந்த ஆண்டு அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, சாலையோர பள்ளத்தை ஒட்டி பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை சார்பில் சாலையின் இருபுறங்களிலும் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு தடுப்பு சுவர் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தடுப்பு சுவரை ஒட்டியுள்ள சுமார் 85 சென்ட் நிலத்தை ராஜீவ்காந்தி என்பவர் விலைக்கு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்திற்கு செல்ல முறையான பாதை இல்லாததால், சாலையோரத்தில் உள்ள ஆழமான பள்ளத்தை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜேசிபி மூலம் சுவர் இடிப்பு

இதையடுத்து, புதிதாக கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி, தனது நிலத்திற்கு செல்லும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்பு சுவரை ஏன் இடிக்க வேண்டும் என ராஜீவ்காந்தியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு, தனது நிலத்திற்கு செல்ல பாதை இல்லாததால் தடுப்பு சுவரின் ஒரு பகுதியை அகற்றி பாதை அமைத்ததாகவும், இதில் தவறு இல்லை என்றும் ராஜீவ்காந்தி தெரிவித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மீண்டும் விபத்து அபாயம்?

தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளதால், சாலையோர பள்ளம் மீண்டும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத சூழலில் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து சுமார் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தடுப்பு சுவர் இடிக்கப்பட்டதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பு சுவரை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply