கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை.

பெரியகுளம்:
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் தற்காலிகமாக குளிக்க தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், கும்பக்கரை அருவி பகுதியில் “குளிக்க தடை” என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அருவியில் நீர்வரத்து குறைந்து, பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை சுற்றுலா பயணிகள் தடையை கடைப்பிடித்து வனத்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply