பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது.. சென்னை விமான நிலையத்திற்கு 4 கி.மீ மேம்பாலம்! புதிய திட்டம் என்ன?

சென்னை: பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் அதிகரித்து வரும் விமானப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவையை சமாளிக்கும் வகையில், விமான நிலைய வளாகத்திலேயே புதிய துணை முனையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக அரசு மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அடையாறு ஆற்றோரம் 4 கி.மீ மேம்பாலம்

புதிய முனையத்தை தாம்பரம்–மதுரவாயல் புறவழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் சுமார் 4 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்ட அணுகுசாலை அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைக்கப்படும்போது அடையாறு ஆற்றின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக மழைக்காலம் மற்றும் வெள்ளப்பெருக்கு நேரங்களில் ஆற்றின் நீரோட்டத்திற்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொழிச்சலூர், தாரப்பாக்கம் பகுதிகளுக்கும் இணைப்பு

விமான நிலையத்திற்கான புதிய அணுகுசாலை அமைப்பதில் பொழிச்சலூர், தாரப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

மேம்பாலமாக அமைப்பதா அல்லது தரைமட்ட சாலையாக அமைப்பதா என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு விரைவான இணைப்பை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

புதிய 5-வது முனையம்

சென்னை விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளுக்கு இடையேயுள்ள பகுதியில், கூடுதல் நிலம் கையகப்படுத்தாமல் புதிய 5-வது முனையத்தை அமைப்பது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்தால், தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு சுமார் 3.5 கோடியில் இருந்து 5.5 கோடியாக உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானங்கள் விரைவாக ஓடுபாதையை விட்டு வெளியேறும் வகையில் Rapid Exit Taxiway வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு புதிய வேகம்

சென்னை விமான நிலையத்தின் ஏற்கனவே நடைபெற்றுவரும் நவீனமயமாக்கல் பணிகளுடன், புதிய முனையம் மற்றும் சாலை இணைப்பு திட்டங்களும் இணைக்கப்பட உள்ளன.

அடையாறு ஆற்றின் நீரோட்டத்தை பாதுகாப்பது, சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பது, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தி அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து தேவையை சமாளிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

Leave a Reply