கொல்லம் வரதட்சணை கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் வழக்கை எடுத்தது!

கொல்லத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் கடுமையான தாக்குதல் தொடர்பாக புதுமணப் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள போலீசாருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்லம் நீண்டகரை புத்தன்துறை பகுதியைச் சேர்ந்த அஞ்சு என்ற இளம் பெண், தனது கணவர் நந்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் குறித்து புகார் அளித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை போதவில்லை எனக் கூறி தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் கணவர் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு கொடூரமாக தாக்கியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின்படி, பிரஷர் குக்கர், லேப்டாப் சார்ஜர், பெல்ட் உள்ளிட்ட பொருட்களால் தாக்கியதாகவும், உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி அஞ்சு மீண்டும் கேரளாவுக்கு வந்த நிலையில், பின்னர் போலீசில் புகார் அளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த வழக்கில் நந்து தினேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது சவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நந்து தற்போது சவுதி அரேபியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அஞ்சுவின் குடும்பத்தினர் வழங்கியதாகக் கூறப்படும் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 20 பவுனுக்கும் அதிகமான நகைகள் கணவர் வீட்டில் இருந்ததாகவும், மீதமிருந்த பணத்தை நந்து தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தொடர்பான முழுமையான உண்மை நிலை போலீஸ் விசாரணையில் தெரியவரும்.

இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், குற்றச்சாட்டுகள் மீது அவசர மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவி வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான Action Taken Report-ஐ 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் ஆணையம் கேட்டுள்ளது.

வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி உண்மை போலீஸ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் தெரியவரும்.

Leave a Reply