முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்! காரில் ஆடுகளை தூக்கிச் சென்ற மர்மநபர்கள் – சிசிடிவி காட்சி வைரல்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோயில் உண்டியல் திருட்டு, வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தல், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை திருடிச் செல்வது என தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் காரிமங்கலத்தில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளும், அனுமந்தபுரத்தில் கூலி தொழிலாளியின் வீட்டில் 5 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த சம்பவங்களின் பரபரப்பு அடங்குவதற்குள், காரிமங்கலம் அருகே வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்மநபர்கள் காரில் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரிமங்கலம் அருகே உள்ள சீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணபதி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சாம்பல் நிற காரில் வந்ததாகக் கூறப்படும் முகமூடி அணிந்த இரண்டு மர்மநபர்கள், கையில் ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கணபதியின் வீட்டை நோட்டமிட்ட அந்த மர்மநபர்கள், வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை தூக்கிச் சென்று காரில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து காரில் வேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதில் மர்மநபர்கள் ஆடுகளை தூக்கிச் சென்று காரில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே, காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், போலீசார் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடு உரிமையாளர் கணபதி அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஆடுகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நகை கொள்ளை முதல் ஆடு திருட்டு வரை தொடர்ந்து வரும் சம்பவங்கள் காரிமங்கலம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply