பாலக்கோடு ஸ்ரீ பால்வண்ணநாதர் கோவிலில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு!.

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பழமை வாய்ந்ததும், புகழ்பெற்றதுமான ஸ்ரீ பால்வண்ணநாதர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ நாளை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பலவண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

வேதங்கள் ஒலிக்க, சங்குகள் முழங்க, வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவ மூர்த்திகள் ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தனர்.

பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, மனதில் உள்ள பயங்கள் விலகி, வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், பிரதோஷ வழிபாட்டின் மூலம் முற்பிறவி பாவங்கள் மற்றும் தோஷங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டு அருள் பெற்றனர். விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply