உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! பென்னாகரத்தில் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை.

தர்மபுரி: உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, தடை செய்யப்பட்ட அல்லது காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பென்னாகரம், ஏரியூர், பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்

கூட்டத்தைத் தொடங்கி வைத்த பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 குறித்தும், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை உரிமம் மற்றும் முதன்மைச் சான்றுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், அனுமதி பெற்ற மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

உர விற்பனையில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

தொடர்ந்து, வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) சிவசங்கரி, உரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1985 குறித்தும், உர விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

உர விற்பனை உரிமம் மற்றும் முதன்மைச் சான்றுகளை முறையாகப் பராமரிப்பதுடன், உரங்களின் விலையைத் தினசரி விலைப் பலகையில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும், விற்பனை முனையக் கருவி மூலம் முறையாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளை கட்டாயப்படுத்தி இணை உரங்களை வழங்கக் கூடாது; உரங்களை அனுமதி பெற்ற கிடங்குகளில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உர விற்பனைக்கான கட்டமைப்புச் செயலி (Framework for Fertilizer Sale) மற்றும் சமச்சீர் உரப் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி எச்சம் குறித்து விழிப்புணர்வு

உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசுகையில், உணவுப் பொருட்களில் எஞ்சியிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கினார். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உர விற்பனையாளர்கள் பங்கேற்பு

இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்டத் தனியார் உர விற்பனையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி, செயலாளர் டில்லிஷ்வர், துணைத் தலைவர்கள் உமாசங்கர் மற்றும் கருபாலன், பொருளாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply