5 மாதங்களாக மூடப்பட்ட மேகமலை அருவி! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் – பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.
தேனி: தேனி மாவட்டம், கடமலை–மயிலை ஒன்றியம், கோம்பைத்தொழு அருகே அமைந்துள்ள மேகமலை அருவியில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகளைக் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை எழில் சூழ்ந்த மேகமலை அருவி
மேகமலைப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்து அமைந்துள்ள இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் மழைக்காலங்களில் அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும். இயற்கையை ரசிப்பதுடன் அருவியில் குளித்து மகிழ்வதற்காகப் பலரும் இங்கு வருவது வழக்கம்.
மழையால் சேதமடைந்த சாலை, படிக்கட்டுகள்
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அருவிக்குச் செல்லும் சாலைகள், பாதுகாப்புக் கம்பிகள் மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்டவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
நீண்ட நாட்களாகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக அருவிக்குச் சென்று குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து, பணிகளை விரைவாக முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்