ஓசூர் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்! ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த திருவள்ளூர் வாலிபர் கைது

ஓசூர்: தமிழக–கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு (32) என்பவரின் உடமைகளை போலீசார் சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் சுமார் 6 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் 6 பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், ரகுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், பெங்களூருவின் மடிவாளா பகுதியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்றதாக ரகு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கடத்தலில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, போதைப்பொருளை வழங்கியவர்கள் மற்றும் பெறவிருந்தவர்கள் யார் என்பது குறித்து சிப்காட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக–கர்நாடக எல்லைப் பகுதியில் ஆம்னி பேருந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply