பாலக்கோடு: புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு: கரிவரதராஜ பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கம்மாளர் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமணா சுவாமி எனப்படும் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
‘கோவிந்தா… கோவிந்தா!’ என பக்தி முழக்கம்
இந்த வழிபாட்டில் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா!’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு, பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயர் பரந்தாமன், விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்