சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: “அவர்கள் எதிரிகள் அல்ல; தூய்மை தேவதைகள்” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விரிவான விளக்கம் அளித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர், அவர்கள் எதிரிகள் அல்ல என்றும், அவர்களின் உழைப்பையும் உரிமைகளையும் அரசு புரிந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
“தூய்மைப் பணியாளர்கள் அல்ல; தூய்மை தேவதைகள்”
தூய்மைப் பணியாளர்களின் பணியின் சிரமத்தை எடுத்துரைத்த அமைச்சர் ராஜ்மோகன், இறந்த விலங்குகள் உள்ளிட்ட கழிவுகளை கைகளால் அகற்றிவிட்டு, அடுத்த கணமே தங்களது உணவை உட்கொள்ள வேண்டிய சூழலில் அவர்கள் பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
இதனால் அவர்களை அரசு “தூய்மை தேவதைகள்” எனக் கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் ஏற்கனவே இரண்டு முறை விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தின்போது காவல்துறையினரால் பலப்பிரயோகம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் தொடர்பாக, ரிப்பன் பில்டிங்கில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
போராட்டத்தில் அரசை விமர்சித்து கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள கோரிக்கைகளை அரசு புரிந்துகொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் களத்திற்கே வாரியத் தலைவர் லயோலா மணியை அனுப்பி ஆறுதல் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வேலை
பணியின் போது உயிரிழந்த ஞானகுமார், மாலா, பார்த்திபன், அருண்ராஜ் ஆகியோருக்கான இழப்பீடு வழங்குவதற்கான ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தாட்கோ அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
செப்டம்பர் 15க்குள் 107 இடங்களில் வசதிகள்
தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இதுவரை 93 இடங்களில் உடை மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், புதிதாக 107 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அந்த இடங்களிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
10.69 லட்சம் முகக்கவசங்கள் – 1.18 லட்சம் கையுறைகள்
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாளொன்றுக்கு ஒரு முகக்கவசம் என்ற அடிப்படையில் சுமார் 10 லட்சத்து 69 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 15 நாட்களுக்கு இரண்டு ஜோடி என்ற அடிப்படையில் 1,18,899 கையுறைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
காலை உணவுக்கு பதிலாக உணவுப்படி?
தூய்மைப் பணியாளர்கள் காலை உணவுக்கு பதிலாக அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து உணவுக்கு பதிலாக உணவுப்படி வழங்குவது தொடர்பான கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தினசரி ஊதியம் ரூ.832 ஆக உயருமா?
தூய்மைப் பணியாளர்களின் தினசரி ஊதியம் தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
தற்போது அரசு உத்தரவின்படி நாள் ஒன்றுக்கு ரூ.762 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் 2026-27ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியமாக ரூ.832 நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து சுமூகமான முடிவு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
3,256 தூய்மைப் பணியாளர்கள் நலத்திட்டத்தில் பதிவு
சென்னை மாநகராட்சியின் 4, 7, 8 ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் இதுவரை 3,256 எஸ்.எச்.ஜி. தூய்மைப் பணியாளர்கள் தாட்கோ மூலம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
விடுபட்டுள்ள பணியாளர்களையும் நலத்திட்டங்களில் இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும், மருத்துவ அவசரநிலை உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
450 புதிய பேட்டரி வாகனங்கள்
தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பழைய பேட்டரி வாகனங்களுக்கு மாற்றாக 450 புதிய பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்ய ஆணை பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதில் 300 வாகனங்கள் மண்டலங்களுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் வருகை மற்றும் புறப்பாட்டை பதிவு செய்யும் மின்னணு பதிவேடு முறை நீக்கப்பட்டு, வழக்கமான வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பணி நிரந்தரம், வார விடுமுறை – விரைவில் முடிவு
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் கருத்துகளும் பெறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
“தூய்மைப் பணியாளர்கள் போராடுவது அவர்களது உரிமை; அவர்களுக்கு வேண்டியதைச் செய்வது எங்களது கடமை. இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என அமைச்சர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.
தமிழக வெற்றிக்குரல்