UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணமா? MDR அமலாக்கம் ஒத்திவைப்பு!
UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் வணிகர்களிடம் வசூலிக்கப்பட உள்ள வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate – MDR) அமல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு புதிய நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பண்டிகைக் காலத்தில் வணிகப் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக UPI மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு தெரிவித்துள்ளது.
வணிகர் அமைப்புகளின் கோரிக்கையால் ஒத்திவைப்பு
MDR கட்டண நடைமுறையை ஒத்திவைக்கக் கோரி தொழில் நிறுவனங்கள், ஃபின்டெக் நிறுவனங்கள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகர் அமைப்புகள் மனுக்களை அளித்திருந்தன. இதையடுத்து, பண்டிகைக் கால நெரிசலைக் கருத்தில் கொண்டு அமலாக்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணமா?
கடந்த செப்டம்பர் மாதம், ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
MDR என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்காக வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணமாகும்.
இந்த விகிதத்தின்படி கணக்கிட்டால்:
- ரூ.2,000 பரிவர்த்தனைக்கு ரூ.8
- ரூ.5,000 பரிவர்த்தனைக்கு ரூ.20
- ரூ.10,000 பரிவர்த்தனைக்கு ரூ.40
எனக் கட்டணம் அமையும்.
சில துறைகளுக்கு ரூ.5 நிலையான கட்டணம்
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 என்ற நிலையான MDR கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வணிகர்களுக்கு கிடைக்கும் ரூ.2,000-க்குக் குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் வசூலிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு
UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கும் முடிவுக்கு எதிராக வணிகர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்தச் சூழலில், பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண நடைமுறை எப்போது அமலுக்கு வரும், வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதன் தாக்கம் என்ன என்பது குறித்த தெளிவு, புதிய தேதி மற்றும் இறுதி வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்