காரிமங்கலம் ஆருண்ணேஸ்வரர் கோயிலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு – 48 நாள் மண்டல பூஜையின் 27-ஆம் நாளில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி – அக்டோபர் 13:

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ ஆருண்ணேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் 48 நாள் மண்டல பூஜையை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இக்கோயிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் 27-ஆம் நாள் பூஜையை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரிமங்கலம் மத்திய ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் தங்கராஜ், கோவிந்தராஜ், வினோத்குமார், பாலக்கோடு ஒன்றியச் செயலாளர் குமார், கிருஷ்ணன் மற்றும் பேரூர்க் கழகச் செயலாளர் நாகமணி, விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் தாபா சிவன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, ஸ்ரீ அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ ஆருண்ணேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி, வழக்கறிஞர் அணியின் இணை அமைப்பாளர் சுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் செளந்தரராஜன், பிரபாகரன், சசிதரன், அசோக்குமார், செல்வகுமார், வீரமணி, சிவபிரகாஷ், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Leave a Reply