திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்! 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்பு.
திருவள்ளூர்: திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் மூன்றாம் நாளில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகாகாளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்டோபர் 11 முதல் 20-ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
மகாகாளி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்
நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகாகாளி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மூலவர் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.
கோயில் வளாகத்தில் நவராத்திரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஓரறிவு உயிரினங்கள் முதல் தெய்வ நிலை வரையிலான பல்வேறு படிநிலைகளை விளக்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம்
இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்கள், கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை நிறைவடைந்ததும் பங்கேற்றவர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்றும், பக்தர்கள் சிரமமின்றி அம்மனைத் தரிசனம் செய்வதற்காகத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்