திருப்பத்தூரில் மூத்த குடிமக்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை ஏற்பாடு – மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் குறித்து விளக்கம்
திருப்பத்தூர் – அக்டோபர் 14: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
குற்றங்களுக்கு எதிரான பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம். முத்துக்குமார் தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act) குறித்தும், மூத்த குடிமக்கள் இல்லங்களுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், மூத்த குடிமக்களின் உரிமைகள், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வயதானவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் சமூகத்தின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.
மூத்த குடிமக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அவர்களின் நலவாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றது.
தமிழக வெற்றிக்குரல்