கிருஷ்ணகிரியில் 90% நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதம்: விவசாயிகள் வேதனை – இழப்பீடு வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, செப். 2:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்களில் சுமார் 90 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பருவமழையை நம்பி விவசாயிகள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால், கடந்த சில காலமாக நிலவும் மாறுபட்ட வானிலை காரணமாக பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடை காலத்தில் மழையும், பருவமழை காலத்தில் கடுமையான வெயிலும் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மழையை நம்பி சாகுபடி செய்த நிலக்கடலை பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்த பயிர்கள் வறட்சியால் வாடி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடிக்காக ஏற்கனவே செலவு செய்த நிலையில், அறுவடை நேரத்தில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழையை எதிர்பார்த்து அதிகளவில் நிலக்கடலை பயிரிட்ட நிலையில், எதிர்பார்த்த அளவு மழை கிடைக்காததால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply