பாலக்காட்டில் முதியவர் அடித்துக் கொலை! கும்பல் கொலை வழக்கில் 7 பேர் கைது.
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே மூலத்தறையில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கும்பல் கொலையாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மூலக்கடா பகுதியைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகத்திலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உடலில் பலத்த காயங்கள்
மூலத்தறை அணைக்கு அருகிலுள்ள ஆள் நடமாட்டமற்ற பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.
உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டபோது, முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த மீனாட்சிபுரம் போலீசார், முதற்கட்டமாக ஐந்து பேரைக் காவலில் எடுத்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் தாக்குதல்?
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, மது போதையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கதிரேசனின் வீட்டின் முற்றத்தில் முதியவர் அடிக்கடி படுத்து வந்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து முதியவரைத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மரக்கட்டை மற்றும் கற்களைப் பயன்படுத்தி முதியவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களைச் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு விசாரணை நடத்தி தடயங்களைச் சேகரித்தனர்.
முதியவர் யார்? போலீசார் விசாரணை
கொலை செய்யப்பட்ட முதியவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் யார் என்பதைக் கண்டறிய கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை மையமாகக் கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தின் முழுப் பின்னணி மற்றும் முதியவரின் அடையாளம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்