கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த 79 வயது மூதாட்டி கொலை! 16 பவுன் தங்க நகைகள் மாயம்.
திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் அருகே காரளத்தில் வீட்டில் தனியாக இருந்த 79 வயது மூதாட்டி சாவித்திரி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நகைகளைத் திருடும் முயற்சியின்போது இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் முதற்கட்டமாகக் கருதுகின்றனர்.
கழுத்தை நெரித்துக் கொலை
சம்பவத்தின்போது சாவித்திரி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அவரது கணவர் விஜயன், மகன் மற்றும் மருமகளுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மாலை 4 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய பேத்தி, சாவித்திரி உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாவித்திரி அணிந்திருந்த சேலையின் தலைப்பால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
16 பவுன் தங்க நகைகள் மாயம்
மூதாட்டி அணிந்திருந்த வளையல்கள், சங்கிலி, மோதிரங்கள் உள்ளிட்ட சுமார் 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளன. இதனால், நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், வீட்டின் பல்வேறு பகுதிகளில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்ததாகவும், கொலையாளியுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் கையுறையும் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணையின் முடிவிலேயே முழுமையான தகவல்கள் தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்