கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பேராசிரியருக்கு பாராட்டு விழா; ‘வானத்திற்கு நீலத்திரை’ நூல் வெளியீடு

கிருஷ்ணகிரி, செப். 2:

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பேராசிரியருக்கான பாராட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்த பேராசிரியர் முனைவர் வெங்கடேசன், பதவி உயர்வு பெற்று பாலக்கோடு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அநுராதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர்கள் முனைவர் திலகவதி, முனைவர் தனராசு மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் இராஜா, முனைவர் முரளி, முனைவர் வடிவேல் உள்ளிட்டோர் பேராசிரியர் வெங்கடேசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கௌரவ விரிவுரையாளர் சத்தியகுமார் எழுதிய ‘வானத்திற்கு நீலத்திரை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நூலின் முதல் பிரதியை பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வெளியிட, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அநுராதா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கௌரவ விரிவுரையாளர் முனைவர் செந்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், பி.டி.ஏ. ஆசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply