சென்னை அம்பத்தூரில் 56 மெகாவாட் தரவு மையம்! சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு; ஒரு பகுதி பயன்பாட்டுக்கு தொடக்கம்.
சென்னை: சென்னை அம்பத்தூரில் 56 மெகாவாட் மின்சாரத் திறன் மற்றும் 4,900 சர்வர் ரேக்குகளைக் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் உடன் இணைந்து தரவு மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் சாலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கேப்பிட்டல் லேண்ட் சார்பில் இந்தத் தரவு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், சென்னையின் தரவு மையத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
4,900 சர்வர் ரேக்குகள்; 56 மெகாவாட் மின்சாரத் திறன்
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தரவு மையத்தில் மொத்தம் 4,900 சர்வர் ரேக்குகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 56 மெகாவாட் மின்சாரத் திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தரவு மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு முழுமையான பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தரவு மையத்தின் சில பகுதிகளின் செயல்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் நேரில் ஆய்வு
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் இணைந்து அம்பத்தூரில் உள்ள தரவு மையத்தைப் பார்வையிட்டார். திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து இருவரும் ஆய்வு செய்தனர்.
சிங்கப்பூர் நிறுவனத்தின் முதலீட்டில் உருவாகும் இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
அம்பத்தூரில் ஏற்கெனவே 100 மெகாவாட் தரவு மையம்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்கெனவே கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பீட்டில், 100 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 56 மெகாவாட் திறனுடன் புதிய தரவு மையம் உருவாகி வருவது சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயின் வருகையையொட்டி, வழிநெடுகிலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்