பாலக்கோடு அரசு மருத்துவமனையில் போக்குவரத்துக் கழக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை! அதிகாரிகள் மீது குடும்பத்தினர் புகார்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பூகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனைக் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் காலை இழந்ததால் மாற்றுப் பணி!

பூகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (48), பாலக்கோடு அரசு போக்குவரத்துப் பணிமனையில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு ஏற்பட்ட விபத்தில் இடது கால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கண்ட்ரோலராகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு!

முனுசாமிக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை கழிவறைக்குச் சென்ற அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்த போக்குவரத்துத் துறை மேலாளர் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, முனுசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மூன்று மாதங்களாக விடுப்பு வழங்கவில்லை எனக் குடும்பத்தினர் புகார்!

முனுசாமியின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் பணியில் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாகவும், அவருக்கு மாற்றுப் பணி வழங்குமாறு பலமுறை கிளை மேலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். நேற்று அலுவலகத்தில் மயக்கமடைந்த முனுசாமியைச் சக ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும், இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

இந்தச் சம்பவம் தொடர்பாக, கிளை மேலாளர் சாந்தகுமார், பொது மேலாளர்கள் ராஜராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முனுசாமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீசார், முனுசாமியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் பாலக்கோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply