வீரதீரச் செயல்களுக்கு “அண்ணா பதக்கம்” விருது! டிசம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களில் 3 பேர், அரசு ஊழியர்களில் 3 பேருக்கு விருது – தலா ₹1 லட்சம் பரிசுத்தொகை; 2027 குடியரசு தினத்தன்று முதலமைச்சர் வழங்குகிறார்!
சென்னை – அக்டோபர் 16:
தமிழகத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பாராட்டி வழங்கப்படும் “அண்ணா பதக்கம்” விருதுக்கு 2027ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்களைப் பரிந்துரைக்க விரும்புவோர் 2026 டிசம்பர் 15ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் அண்ணா பதக்கம் வழங்கப்படும்?
வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இவ்விருதைப் பெறத் தகுதியுடையவர்கள். பொதுமக்களில் மூன்று பேருக்கும், அரசு ஊழியர்களில் மூன்று பேருக்கும், சீருடைப் பணியாளர்கள் உட்பட, இப்பதக்கம் வழங்கப்படும்.
இந்த விருதைப் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. விருது பெறுபவர்களுக்கு ஒரு பதக்கம், தகுதியுரை மற்றும் ₹1,00,000 பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்படும்.
2027ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவின்போது தமிழக முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
அண்ணா பதக்கத்திற்கான பரிந்துரைகள் தமிழக அரசின் விருதுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளமான https://awards.tn.gov.in/ வழியாக மட்டுமே பெறப்படும்.
இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் முறையாக நிரப்ப வேண்டும். விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் நபர் செய்த வீரதீரச் செயல்கள் குறித்து தெளிவாக விளக்கும் தகுதியுரையையும் இணைக்க வேண்டும். இந்த விளக்க உரை அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
டிசம்பர் 15 கடைசி நாள்
2027ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2026 டிசம்பர் 15 ஆகும். இணையதளம் வழியாகப் பெறப்படும் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிடைக்காத பரிந்துரைகள் நிராகரிக்கப்படும்.
அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு, விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் எனப் பொதுத்துறை அரசுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரதீரச் செயல்கள் மூலம் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கிய தகுதியுடைய நபர்களை உரிய விவரங்களுடன் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்